ஜோகூர் பாரு, ஜூலை 23 – ஜோகூர் பாருவில், கடந்த சனிக்கிழமை காணாமல் போன, ஆல்பர்டைன் லியோ எனும் ஆறு வயது, பத்தாங் காலியிலுள்ள, மலிவு விலை தங்கும் விடுதி ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை மணி 4.45 வாக்கில் அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஸ்னர் எம்.குமார் தெரிவித்தார்.
அச்சிறுமிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும், இதற்கு முன் கூறப்பட்டதை போல அவரது தலை முடி வெட்டப்படவில்லை என்பதையும் குமார் உறுதிப்படுத்தினார்.
தற்சமயம், மருத்துவ பரிசோதனைக்காக அச்சிறுமி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பத்தாங் காலியிலுள்ள, தங்கும் விடுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், ஆல்பர்டைன் லியோவை கடத்தி வைத்திருந்த ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டான்.
அதனை தொடர்ந்து, அந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் கைதுச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
அதில், நால்வர் விசாரணைக்கு உதவும் பொருட்டு நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வேளை ; சிறுமியுடன் தங்கும் விடுதியில் கைதான ஆடவன், தடுப்பு காவல் உத்தரவை பெற இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவான் என குமார் சொன்னார்.
கடந்த சனிக்கிழமை, இரவு மணி 8.30 வாக்கில், இஸ்கண்டார் புத்ரியிலுள்ள, Eco Galleria பேரங்காடிக்கு சென்றிருந்த போது, ஆல்பர்டைன் லியோ காணாமல் போனார்.
எனினும், அதனை ஒரு கடத்தல் சம்பவமாக பின்னர் போலீஸ் வகைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.