ஜோகூர் பாரு, ஏப் 16 – ஜோகூர் இந்திய சமூகம் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் தேவைகள் குறித்து ஜோகூர் மந்திரிபுசாரும் மாநில தேசிய முன்னணி தலைவருமான Onn Hafiz Ghazi யின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. ஜோகூர் அம்னோ தொடர்பு குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ஜொகூர் மஇகா தலைவரும் Kahang சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.வித்யானந்தன் தலைமையில், ஆட்சிக்குழு உறுப்பினரும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவின் தலைவருமான கே. ரவின் குமார், ஜோகூர் மாநில ம.இ.காவின் நிர்வாக குழு உறுப்பினர்கள், மாநில இளைஞர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். ஜோகூரிலுள்ள ஊராட்சி மன்றங்களில் மட்டுமின்றி அம்மாநிலத்திலுள்ள மாவட்ட அலுவலகங்கள் உட்பட மாநில அரசு துறைகளில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளையும் இந்த சந்திப்பின்போது வித்யானந்தான் மந்திரிபுசாரிடம் முன்வைத்தார்.
மேலும் ஜி.எல்.சி எனப்படும் ஜோகூர் மாநில அரசாங்க நிறுவனங்களின் இயக்குனர் வாரியக் குழுவில் ம.இ.கா பொறுப்பாளர்களுக்கு வாய்ப்பளிப்பது, மேலவை உறுப்பினராக நியமிப்பது, ஜோகூரில் இந்திய மக்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊராட்சி மன்ற இடங்களுக்கும் ம.இ.கா பிரதிநிதிகள் நியமிப்பது என்ற கோரிகைகளும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. மேலும் இந்திய இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் , இந்திய குத்தகையாளர்களுக்கு குத்தகை திட்டங்கள் மற்றும் வழிபாட்டு மையங்களுக்கான மான்யங்கள் வழங்குவதிலும் ஜோகூர் மாநில அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வித்யானந்தன் கேட்டுக்கொண்டார். இந்திய சமூகத்திற்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுவையும் அவர் மந்திரிபுசார் Onn Hafiz Ghazi யிடம் வழங்கினார்.
இதனிடையே இந்தியர்களின் நலன்களுக்காக ம.இ.கா தொடர்ந்து குரல் கொடுத்து வருவது குறித்து மந்திரிபுசார் தமது பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார். கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலின்போது தேசிய முன்னணியின் வெற்றிக்கு ம.இ.கா ஆற்றிய பங்கிற்காகவும் வழங்கிய ஆதரவுக்காகவும் நன்றி தெரிவித்துக் கொண்டதோடு ஜோகூர் இந்தியர்களின் நலன்கள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ம.இ.கா எழுப்பிய விவகாரங்களை ஜோகூர் அரசாங்கம் கவனம் செலுத்தி கட்டம் கட்டமாக தீர்க்க முயற்சிக்கும் என்றும் Onn Hafiz தெரிவித்தார். ஜோகூர் மந்திரிபுசாருக்கும் மாநில ம.இ.கா நிர்வாக குழுவுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பு நல்ல நட்றவு மற்றும் புரிந்துணர்வுக்கு அடித்தளமாக இருந்ததாக ஜோகூர் மாநில செயலாளர் வடிவேலு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.