
தாய்லாந்து, அக்டோபர் 5 – தாய்லாந்துக்கு காரில் செல்லும் மலேசியர்கள், விபத்து ஏற்பட்டால் மற்றவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டை உள்ளடக்கும் மூன்றாம் தரப்பு காப்பீடு பெறுமாறு சோங்க்லா (Songkhla) மலேசிய துணைத் தூதரக அதிகாரி அஹ்மத் ஃபஹ்மி அஹ்மத் சர்காவி (Ahmad Fahmi Ahmad Sarkawi) அறிவுறுத்தியுள்ளார்.
மலேசியர் ஒருவர் வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்பட்டு, ஒருவர் காயமடைந்தாலோ உயிரிழந்தாலோ, பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டிய நிலை ஏற்படலாம். இந்த இழப்பீட்டுத் தொகை அதிகமாக இருக்கக்கூடும் என்பதால் மருத்துவச் செலவுகளை மட்டும் உள்ளடக்கும் காப்பீடு போதுமானதாக இருக்காது என்று அவர் கூறினார்.
மேலும், இயற்கைப் பேரிடர்களால் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களையும் காப்பீட்டில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
தாய்லாந்தின் பட்டாணி, யாலா, நாராத்திவாட் ஆகிய பாதுகாப்பு அதிகம் தேவைப்படும் பகுதிகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார். தெற்கு தாய்லாந்தில் பயணம் செய்யும்போது Google Maps அல்லது Apple Maps பயன்படுத்துமாறும், குறுக்கு வழிகளில் பாதுகாப்பற்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்லக்கூடிய Waze செயலியைத் தவிர்க்குமாறும் அவர் பரிந்துரைத்தார்.



