
கோலா நெருஸ், ஜூன்-9-திரெங்கானுவில் கடந்த ஆண்டு மொத்தம் 757,869 ஆமைக் குஞ்சுகள் வெற்றிகரமாகக் கடலில் விடப்பட்டன.
அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும், கடல்சார் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பேணுவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு முயற்சிகளின் வெற்றியை இந்த நடவடிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.
திரெங்கானு ஆமை மேலாண்மை மற்றும் பாதுகாப்புத் திட்டம், 2025-ஆம் ஆண்டில் 13,180 பச்சை ஆமைக் கூடுகளையும், 1.07 மில்லியன் முட்டைகள் சேகரிக்கப்பட்டு அடைகாக்கப்பட்டதையும் பதிவு செய்துள்ளதாக மீன்வளத் தலைமை இயக்குநர் டத்தோ அட்னான் உசேய்ன்( Adnan Hussein) தெரிவித்தார்.
இந்தத் திட்டம் 71.07 விழுக்காடு குஞ்சு பொரிக்கும் வெற்றி விகிதத்தை அடைந்துள்ளது.
கடலில் விடப்படும் ஒவ்வொரு ஆமைக் குஞ்சும், அந்த இனத்தின் உயிர்வாழ்விற்கான புது நம்பிக்கையை அளிப்பதோடு, நாம் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள கடல்சார் சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கிறது என்று 2026 உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு புலாவ் ரெடாங் கடல் பூங்காவில் 570 ஆமைக் குஞ்சுகளை விடும் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் அட்னான் இத்தகவலை வெளியிட்டார்.
மலேசியாவின் பச்சை ஆமைகளுக்கான முக்கிய முட்டையிடும் இடமாக திரெங்கானு நீடிக்கிறது.
புலாவ் ரெடாங்கில் (Pulau Redang ) உள்ள சாகர் ஊத்தாங் ( Sagar Hutang ) மற்றும் பாசிர் பாஞ்சாங் கடற்கரைகள், டுங்குனில் உள்ள ரந்தாவ் அபாங் கடற்கரை, மற்றும் கெமாமானில் உள்ள கெலிகா (geliga) மற்றும் மா’டேரா (Ma’Daerah) கடற்கரைகள் முக்கிய இடங்களாக உள்ளன.
மேலும், இந்தத் திட்டம் கடந்த ஆண்டு 308 லெதர்பேக் (leatherback )ஆமைக் கூடுகளையும், 23 ஹாக்ஸ்பில் (hawksbill ) ஆமைக் கூடுகளையும் பதிவு செய்தது.



