Latestமலேசியா

தைப்பிங் கேபள் திருட்டுக் கும்பல்; கெடாவில் போலீசிடம் சிக்கியது

ஈப்போ, பிப்ரவரி-27, தைப்பிங்கில், போலீஸ் வாகனம் விரட்டிச் சென்ற போது, அதன் மீது இரும்பினால் ஆன பொருளை வீசி, இரு போலீஸ்காரர்களுக்கு காயம் விளைவித்த நால்வரடங்கிய கேபள் திருட்டு கும்பல், கைதுச் செய்யப்பட்டுள்ளது.

கெடா, பாடாங் செராய் மற்றும் சுங்கை பட்டாணியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையின் போது 38 முதல் 42 வயது வரையிலான அந்த உள்ளூர் ஆடவர்கள் கைதாகினர்.

அக்கும்பல், தாமான் ஈப்போ ஜயா தீமோரில் கேபள் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்ததாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முஹமட் யுஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.

விசாரணைக்காக, மார்ச் 1 வரை அக்கும்பல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
சிறுநீர் பரிசோதனையில், அவர்கள் நால்வருமே போதைப் பொருள் உட்கொண்டது உறுதிப்படுத்தப்பட்டது.

பிப்ரவரி 19-ஆம் தேதி அந்த கேபள் திருட்டு கும்பலின் அட்டகாசம் குறித்து தகவல் கிடைத்த போலீஸ், அவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் பயணித்த காரை துரத்தியிருக்கிறது.

அவர்களைப் துரத்திச் செல்லும் போது, அக்கும்பல் வீசி எறிந்த இரும்புப் பட்டு கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் வாகனம், தடம்புரண்டு சாலைத் தடுப்பை மோதியது.

அதில் போலீசார் இருவருக்கு தலை, நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

பின்னர் வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 215-ஆவது கிலோ மீட்டர் வரை விரட்டிச் சென்று வெற்றிகரமாக அக்காரை தடுத்து நிறுத்தினாலும், சுதாகரித்துக் கொண்ட அக்கும்பல் ‘Toyota Hilux’ வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து கம்பி நீட்டியது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு, தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்திய போலீஸ், கெடாவில் வைத்து திங்கட்கிழமை அக்கும்பலைக் கைதுச் செய்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!