
கோலாலம்பூர், நவ.16-கோம்பாக்கில் திறந்த நிலையில் இருந்த வடிகாலில் விழுந்த முதியவர் ஒருவர், இன்று அதிகாலை பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டார்.
Jalan Amaniah சாலையோரம் அடர்ந்திருந்த புதர்களுக்குள் இருந்து உதவி கோரும் அலறல் சத்தம் கேட்டதைக் கவனித்த ஒருவர், அங்கு சென்று பார்த்தபோது சம்பந்தப்பட்ட முதியவர் வடிகாலுக்குள் விழுந்து கிடப்பதைக் கண்டார். அதன் பிறகு அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அதிகாலை நேரத்தில் அப்பகுதி மிகவும் அமைதியாக இருந்ததால், முதியவர் வடிகாலில் விழுந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியிருக்கலாம் என ‘Threads’ சமூக ஊடகத்தில் @ninirafar என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
அந்த இடம் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதை அல்ல. அதோடு, செடி கொடிகள் அடர்ந்து வளர்ந்திருந்ததால், வடிகால் மூடாமல் இருந்ததை யாரும் கவனிக்க வாய்ப்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அச்சம்பவத்தில் அம்முதியவரின் காலில் சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. மற்றொருவரின் உதவியுடன் வடிகாலிலிருந்து மீட்கப்பட்ட அவர், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அம்முதியவர் வீடு திரும்பியபோது, அவரது மனைவி அவருக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது.



