
நேப்பாளத்தில் ஏற்பட்ட மோசமான திடீர் வெள்ளத்தில் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களைத் தொடர்பு கொள்ள தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கைலாஷ் யாத்திரைக்காக நேப்பாளம் சென்ற தமது 57 வயது தாயார் எஸ். கோமதியை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை என அவரது மகள் தரணியா ராஜன் தெரிவித்திருக்கிறார்.
Spectrum Horizons Travels பயண நிறுவனத்தின் ஏற்பாட்டில் இரு வாரப் பயணமாக கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தமது தாயார் 26 பேருடன் அங்கு புறப்பட்டதாக அவர் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
தமது தாயார் மட்டுமின்றி நேப்பாள வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும். அதற்கு சம்பந்தப்பட்ட தரப்புகள் உரிய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தரணியா உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
நேப்பாள வெள்ளத்தைத் தொடர்ந்து, தொடர்பு கொள்ள முடியாத பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 668 நபர்களின் பட்டியலை நேப்பாள சுற்றுலாத் துறை நேற்று வெளியிட்டது.
அவர்களில் 51 பேர் மலேசியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 31 வெளிநாட்டினர் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்களில் மலேசியர்கள் யாரேனும் உள்ளார்களா என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை என விஸ்மா புத்ரா கூறியுள்ளது.
நேப்பாள வெள்ளத்தில் இதுவரை சுமார் 500 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயிருக்கின்றனர்.



