Latestமலேசியா

பராமரிப்புச் செலவின உயர்வால் பள்ளிப் பேருந்துக் கட்டணம் 10% உயரலாம்

ஜியோர்டவுன், மார்ச்-4, புதியப் பள்ளிப் பருவம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில், வழித்தடம் மற்றும் வாகனத்தின் வகையைப் பொருத்து, பள்ளிப் பேருந்துக் கட்டணம் சராசரியாக 10 விழுக்காடு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The Star கேட்ட போது மலேசியப் பள்ளிப் பேருந்து நடத்துனர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அவ்வாறு கோடி காட்டியது.

பராமரிப்புச் செலவின உயர்வாலும், பேருந்து ஓட்டுநர்களின் சம்பளத்தாலும், பேருந்துக் கட்டண உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டதாக அது கூறியது.

ஓட்டுநர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதையும் அக்கூட்டமைப்புச் சுட்டிக் காட்டியது.

கோவிட் 19 பெருந்தொற்றுக்குப் பிறகு வீட்டில் வேலை செய்யும் நடைமுறை பெரும்பாலும் முடிவுக்கு வந்திருப்பதால், சில இடங்களில் பள்ளிப் பேருந்துகளுக்கான தேவை 20% அதிகரித்துள்ளது.

ஆனால், அதனைச் சமாளிக்கும் அளவுக்கு பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் எண்ணிக்கை இல்லை என்பதே நிதர்சனம் என அக்கூட்டமைப்பு விளக்கியது.

கோவிட்டுக்குப் பிறகு ஏராளமான ஓட்டுநர்கள் பாதுகாப்பான வேறு வேலைகளைத் தேடிச் சென்று விட்டதால், பேருந்து மற்றும் வேன் ஓட்டுநர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு குறைந்து விட்டது.

தங்களிடம் 16 ஆயிரம் உறுப்பினர்கள் இருந்த நிலையில் கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு எட்டாயிரம் பேர் மட்டுமே எஞ்சியிருப்பதே அதற்கு சான்று என அக்கூட்டமைப்புக் கூறியது.

இவ்வேளையில், எஞ்சின் எண்ணெய், டையர்கள் உள்ளிட்ட 90% உபரிப் பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால், பேருந்து பராமரிப்புச் செலவினமும் உயர்ந்திருக்கிறது.

அது தவிர்த்து, தகுதி வாய்ந்த ஓட்டுநர்களைக் கவர்ந்திழுக்கும் பொருட்டு, குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்திற்கும் சற்றுக் கூடுதலாக பேருந்து நடத்துனர்களும் உரிமையாளர்கள் கொடுக்க வேண்டியிருக்கிறது.

இது போன்ற அம்சங்களால் கட்டண உயர்வைத் தடுக்க இயலவில்லை.

எனினும், பள்ளிப் பேருந்துக் கட்டண விகிதம் தோராயமாக எத்தனை விழுக்காடு உயரும் என்பதை அக்கூட்டமைப்புத் தெரிவிக்கவில்லை.

ஆனால், பள்ளிப் பேருந்து அல்லது வேன் கட்டணம் சராசரியாக 50 ரிங்கிட்டுக்கும் 200 ரிங்கிட்டுக்கும் இடைப்பட்ட விலையில் இருக்கும் என அது கோடி காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!