
சைபெர்ஜெயா, ஏப்ரல்-15-மலேசியப் பத்திரிகையாளர் கழகமான MPI, ‘AI பத்திரிகைத் துறை டிப்ளோமா’ படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஊடகத் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்திச் செய்வதையும், பத்திரிகைத் துறையின் அறநெறிகளை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து MPI தலைமை நிர்வாக அதிகாரி அய்னோல் அம்ரிஸ் இஸ்மாயில் (Ainol Amriz Ismail) கூறுகையில், “செய்தித் தயாரிப்பில் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்த திறமையான பத்திரிகையாளர்களை உருவாக்கும் நோக்கில், ‘அகாடமி இன் இண்டஸ்ட்ரி’ (ADI) முன்னெடுப்பின் கீழ் மலேசிய உற்பத்தித்திறன் கழகத்துடன் (MPC) இணைந்து இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதே சமயம், டிஜிட்டல் அச்சுறுத்தல்களைப் புரிந்துகொள்வதற்கும், தரவுகள் மற்றும் செய்தி ஆதாரங்களைப் பாதுகாப்பதற்கும் பத்திரிகையாளர்களுக்கு உதவும் வகையில் ‘இணையப் பாதுகாப்பு பத்திரிகைத் துறை டிப்ளோமா’ படிப்பையும் MPI அறிமுகப்படுத்தியுள்ளது.
நடைமுறைப் பயிற்சி மற்றும் கோட்பாடுகளை உள்ளடக்கிய இந்த இரு பாடத்திட்டங்களிலும், Content Automation, தரவு பகுப்பாய்வு மற்றும் இணைய அச்சுறுத்தல் மேலாண்மை போன்றவை கற்பிக்கப்படும்.
இதன் முதல் குழுவில் சுமார் 40 மாணவர்கள் ஜூலை மாதத்திற்குப் பிறகு சேர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



