
சிரம்பான், ஏப்ரல்-15-சிரம்பானில் உள்ள ஒரு பள்ளியில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் செலுத்தாததற்காக மாணவர் ஒருவரது SPM தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து கல்வித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
டிக் டோக்கில் பரவிய வீடியோ ஒன்றை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதில், தேர்வில் சிறப்புச் தேர்ச்சியைப் பதிவுச் செய்த ஒரு மாணவருக்கு, பாராட்டு விழாவின் போது தேர்வுச் சான்றிதழ் இல்லாமல் வெறும் வெற்று உறையே வழங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், அந்த மாணவர் பெற வேண்டிய 250 ரிங்கிட் பரிசுத் தொகையும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிலுவைக் கட்டணத்திற்காகப் பள்ளியால் பிடித்தம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
இது குறித்து விளக்கமளித்துள்ள மாநில கல்வி இலாகா, பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம் என்பது விருப்ப அடிப்படையிலான பங்களிப்பு மட்டுமே என்றும், அதைக் காரணமாகக் கொண்டு மாணவர்களின் தேர்வு முடிவுகளைத் தடுத்து நிறுத்தக் கூடாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் நலனே முக்கியம் என்றும், விதிமுறைகளை அனைத்துப் பள்ளி நிர்வாகங்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் கல்வி இலாகா மீண்டும் நினைவுறுத்தியுள்ளது.



