Latestமலேசியா

பேரரசரின் நீதி விவேகத்தால் மக்கள் நன்மை அடைந்தனர் – டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், ஜன 28 – மாட்சியை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாவின் நீதி மற்றும் விவேகத்தால் மக்கள் பயனடைந்துள்ளனர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார். அல்-சுல்தான் அப்துல்லா மற்றும் பேரரசியார் துங்கு அசிசா அமினா மைமுனா இஸ்கண்டார் ஆகியோர் மக்கள் நலனில் காட்டிய அக்கறை பேரரசருக்கும் அவரது குடிமக்களுக்கும் இடையே இருந்துவந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்று பிரதமர் வர்ணித்தார். நீடித்த அரசியல் உறுதியற்ற நிலைத்தன்மை , கோவிட்-19 தொற்றுநோயின் பரவல், அதன் தாக்கம், மற்றும் மாறிவரும் பொருளாதார சரிவு ஆகியவற்றில் தொடங்கி, நாடு நிச்சயமற்ற மற்றும் நெருக்கடியில் இருந்தது. இருந்தபோதிலும் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா மாட்சிமைமிக்க தலைமைத்துவத்தின் பொறுப்புகளை சரியான முறையில் நிறைவேற்றியுள்ளார். மக்கள் அணுகுமுறைகளுக்கு முன்னுரிமை வழங்கும் குணங்களை கொண்ட அவர் எல்லா சூழ்நிலையிலும் அமைதி மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை வழங்கி மக்களுடன் தொடர்ந்து இணைந்துள்ளார் என அன்வார் புகழாரம் சூட்டினார்.

16 வது பேரரசரின் பணி நிறைவை முன்னிட்டு நேற்றிரவு நடைபெற்ற அரசாங்க விருந்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். அல்-சுல்தான் அப்துல்லாவின் ஆட்சி நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியது. மூன்று பிரதமர்களின் மாற்றங்கள் அரசாங்க நிர்வாகத்தை சோதித்தன. மேலும் சாதாரண நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட திறமையான தலைமை மற்றும் தியாகம் தேவைப்பட்டது. எப்படியிருந்தபோதிலும் , அரசியலமைப்பு முடியாட்சி அமைப்பு மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) பாணியலான ஜனநாயக அமைப்பில் அதன் பங்குடன், முடியாட்சியின் முக்கியத்துவம், நீடித்த அரசியல் சவால்கள் மற்றும் நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருவதில் பேரரசர் முக்கிய பங்காற்றியிருப்பதையும் அன்வார் விவரித்தார்.

இறுதியாக அரசியல் முட்டுக்கட்டையை அகற்ற, நாட்டிலுள்ள அனைத்து இனங்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் பிரதேசங்களை உள்ளடக்கிய நிலையான மற்றும் வலுவான அரசாங்கத்தை அமைப்பதற்கு பேரரசர் ஆணையிட்டது பொருத்தமான முன்னோடியாக மாறியுள்ளது என்பதைக் குறிக்கிறது என்றும் அவர் கூறினார். மேலும் ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்குவதில் அல்-சுல்தான் அப்துல்லா ஆற்றிய விவேகமான பங்கிற்கும் அன்வார் தமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!