Latestமலேசியா

மலேசிய சீர் நேரத்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை – துணை அமைச்சர்

கோலாலம்பூர், மார்ச்-6, தீபகற்ப மலேசிய நேரத்தை GMT+8-டில் இருந்து GMT+7-ழாக மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

நடப்பில் உள்ள மலேசிய சீர் நேரம் மாற்றப்பட்டால் அது மக்களுக்குச் சுமையாக அமையும் என முதலீடு, வர்த்தக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் லியூ சின் தோங் கூறினார்.

சூரியனைப் பயன்படுத்தி கணக்கிடப்படும் இந்த GMT+8, GMT+7 நேரம் உண்மையில் அன்றாட வாழ்க்கையில் எந்த தாக்கத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்றார் அவர்.

Body Clock சுழற்சிக்கு ஏற்ப மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை வாழ ஏதுவாக, தீபகற்பத்தின் நேரத்தை அரசாங்கம் GMT+7-க்கு மாற்ற உத்தேசம் எதுவும் கொண்டுள்ளதா என மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, துணை அமைச்சர் அவ்வாறு பதிலளித்தார்.

சாயங்கால நேரம் மிச்சப்படுவதால் தான், GMT+8 நேர முறையே மலேசியர்களுக்கு வசதிபடும் எனக் கருதி அதனை அரசாங்கம் தேர்ந்தெடுத்தது என துணை அமைச்சர் கூறினார்.

ஆகக் கடைசியாக 1981-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி மலேசிய சீர் நேரம் மாற்றப்பட்டது.

அவ்வகையில், 1982, ஜனவரி முதல் தேதியன்று, சபா, சரவாக் மாநிலங்களுடன் சமமாக இருக்கும் வகையில், தீபகற்ப நேரம் 30 நிமிடங்களுக்கு கூட்டி வைக்கப்பட்டது.

அதுவரை தீபகற்ப நேரம், கிழக்கு மலேசிய நேரம் என அரை மணி இடைவெளியில் இரண்டு நேரங்களை நாடு கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!