
புத்ராஜெயா, மே-15-தேசியக் கல்வி முறைக்கு வெளியிலுள்ள மாணவர்கள் பொது உயர் கல்வி நிறுவனங்களில் (IPTA) இணைவதற்கானப் பாதைகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முடிவு, நாட்டின் கல்விக் கொள்கையை எந்த வகையிலும் பாதிக்காது.
உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் அதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, Tahfiz நிறுவனங்கள் மற்றும் சீனத் தனியார் பள்ளி மாணவர்களுக்குப் பொதுப் பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட சில சேர்க்கைப் பாதைகளை உருவாக்கும் முடிவானது, மாற்று கல்வி முறைகளுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அல்ல என அவர் விளக்கமளித்தார்.
இது சில அரசியல் தரப்பினரால் தவறாக சித்தரிக்கப்பட்டு, அரசாங்கம் UEC சான்றிதழை முழுமையாக அங்கீகரித்துவிட்டதாக வதந்திகள் பரப்பப்படுவதாக அவர் சாடினார்.
மாணவர்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பொதுப் பல்கலைக்கழகங்களில் நுழைவதற்கு நமது தேசியக் கல்வி முறையின் அடிப்படையான SPM தகுதியைப் பெற்றிருப்பது கட்டாயமாகும் என்றும், இதில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப்படாது என்றும் அமைச்சர் சாம்ரி உறுதிபடக் கூறினார்.



