
கோலாலம்பூர், அக்டோபர்-11 – போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் ஓட்டியதாகக் கூறப்படும் ஓட்டுநரால், மாலத்தீவைச் சேர்ந்த 22 வயது மாணவி ஆமினா இமீலி நாசிம் (Aamina Imeely Nazim) உயிரிழந்த சம்பவத்தில், கொலைக் குற்றச்சாட்டு பதிவுச் செய்யப்படாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பி.கே.ஆர் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சிவமலர் கணபதி, இதுதொடர்பாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் விளக்கமளிக்க வேண்டுமென அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட e-hailing ஓட்டுநர் முகமது ஷாஃபிக் இப்ராஹிம் (Muhammad Syafiq Ibrahim), சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு, 9,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், கிள்ளான் மற்றும் தெலுக் இந்தானில் நிகழ்ந்த இதேபோன்ற உயிரிழப்புச் சம்பவங்களில், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 302-ஆவது பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவுச் செய்யப்பட்டதை சிவமலர் சுட்டிக்காட்டினார்.
எனவே, சட்ட நடவடிக்கைகளில் ஏன் இத்தகைய வேறுபாடு நிலவுகிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
இனம், மதம், தேசியம் அல்லது சமூக அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல், அனைவருக்கும் சட்டத்தின் கீழ் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் சிவமலர் வலியுறுத்தினார்.



