
கோலாலம்பூர், அக்டோபர்-11 – கோலாலம்பூர், கம்போங் செகாம்புட் டாலாமில் வீடுகள் அகற்றப்பட்டு, மாற்று வீடுகள் வழங்கப்படாமல் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்கி வந்த ஏழை இந்தியக் குடும்பங்களுக்கு, கூட்டரசு பிரதேச ம.இ.காவின் முயற்சியால் ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது.
கோலாலம்பூர் மாநகர மன்றமான DBKL இரு குடும்பங்களுக்கு வீடுகளை வழங்க முன்வந்துள்ளதாக, கோலாலம்பூர் ம.இ.கா தலைவர் டத்தோ S. ராஜா கூறினார்.
அப்பகுதி வாகனமோட்டும் பயிற்சி மையமாகப் பயன்படுத்தப்படவிருப்பதால், அங்கு வசித்தவர்களில் பெரும்பாலோருக்கு குறிப்பிட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
சிலர், கிடைத்தப் பணத்தை வைத்து வாடகை வீடுகளுக்குச் சென்று விட்டனர்.
பொருளாதார வசதியில்லாத சில குடும்பங்கள் தங்குவதற்காக தற்காலிகமாக container கொள்கலன்கள் வழங்கப்பட்டன.
ஆனால், மாற்று வீடுகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதி காற்றில் பறந்ததாகவும், கேட்டால் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டதாகவும் முன்னதாக வணக்க மலேசியாவிடம் கூறியிருந்தனர்.
இவ்விவகாரம் டத்தோ ராஜாவின் கவனத்திற்கும் சென்று, அவரும் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட தரப்புகளை வலியுறுத்தினார் .
இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேற்று மீண்டு நேரில் சந்தித்து அவர், 2 வீடுகள் வழங்கப்படவிருக்கும் மகிழ்ச்சித் தகவலை பகிர்ந்துகொண்டார்.
அவ்வீடுகளுக்கான டெப்பாசிட் முன்பணத்தையும் கூட்டரசு ம.இ.காவே ஏற்றுக் கொள்ளும் என்றும் ராஜா அறிவித்தார்.
வீடுகளை ஒதுக்கி தீர்வைத் தந்திட்ட DBKL, இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வர உதவிய வணக்கம் மலேசியா மற்றும் வலைத்தளவாசிகளுக்கும் இவ்வேளையில் டத்தோ ராஜா நன்றித் தெரிவித்துக் கொண்டார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விரைவிலேயே வீட்டுரிமை கடிதங்கள் வழங்கப்படும் என்றார் அவர்.
ஒருவழியாக தங்களின் பிரச்னைக்கு விடிவு பிறந்ததை எண்ணி அக்குடும்பங்கள் டத்தோ ராஜாவின் முயற்சிக்கு நன்றிப் பாராட்டினர்.



