Latestமலேசியா

விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்கள்; 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவ SpaceX நிறுவனத்துக்கு அனுமதி!

வாஷிங்டன், நவம்பர் 26 – விண்வெளியில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துக்கான தரவு மையங்களை அமைக்கும் நோக்கில், பூமியின் சுற்றுப்பாதையில் 10 லட்சம் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு அமெரிக்காவின் SpaceX நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் (FCC), புதன்கிழமை இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. ‘Starmind’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம், கணினி செயலாக்கத் திறனை விண்வெளிக்கு மாற்ற SpaceX திட்டமிட்டுள்ளது.

விண்வெளியில் கிடைக்கும் சூரிய ஆற்றலைப் பயன்படுத்துவதுடன், அங்குள்ள இயற்கையான குளிர்ச்சிச் சூழலையும் தரவு மையங்களுக்குப் பயன்படுத்த முடியும் என இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மின்சாரம் தயாரிக்கப் பெரிய சூரிய மின்தகடுகள், மேம்பட்ட குளிரூட்டும் வசதிகள் மற்றும் பூமிக்குத் தரவுகளை அனுப்பும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல சவால்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

FCC விதிமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்ட மொத்த செயற்கைக்கோள்களில் 10 விழுக்காட்டை 2035 நவம்பருக்குள்ளும், 50 விழுக்காட்டை 2038 நவம்பருக்குள்ளும் விண்ணில் நிலைநிறுத்த வேண்டும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!