
மலாக்கா, நவ.26-மலாக்கா, Taman Bertam Perdanaவில் உள்ள சிறிய மளிகைக் கடையொன்றில், முகபாவனை குறித்து கருத்து தெரிவித்ததால், கடைப் பணியாளர் ஒருவர் அந்த வாடிக்கையாளரின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த நவம்பர் 22ஆம் தேதி இரவு சுமார் 9.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக Melaka Tengah மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் Halim Abas தெரிவித்தார். பெண் வாடிக்கையாளர் ஒருவர், மற்றொரு பணியாளரின் முகபாவனை தனக்குப் பிடிக்கவில்லை என்றும், அவர் புன்னகைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
பின்னர் சம்பந்தப்பட்ட பெண் கடையை விட்டுச் சென்ற சிறிது நேரத்தில், தனது கணவர் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் மீண்டும் அங்கு வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் கணவர், கடைப் பணியாளர் மீது சிகரெட் பாக்கெட்டை வீசியதுடன், அவரை வலுக்கட்டாயமாகத் தள்ளியதில் அவர் குளிர்சாதனப் பெட்டியில் மோதியதாகக் கூறப்படுகிறது.
அதனை அடுத்து, அந்நபரின் மனைவி தலையிட்டு நிலைமையைச் சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் அக்குடும்பத்தினர் அடர் நீல நிற வாகனத்தில் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதனிடையே, தனது பாதுகாப்பு குறித்த அச்சத்தில் பாதிக்கப்பட்ட கடைப் பணியாளர் காவல்துறையில் புகார் அளித்ததுடன், மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுள்ளார்.
அச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக Halim தெரிவித்தார். விசாரணைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட அனைவரையும் காவல்துறை தேடி வருகிறது.



