
கோலாலம்பூர், நவம்பர் 26 – மாணவர்கள் மன அழுத்தத்தைச் சமாளிக்க உதவும் வகையில், பள்ளிப் பாடத்திட்டத்தில் மனநலக் கல்வியை அறிமுகப்படுத்தும் கல்வி அமைச்சின் முன்மொழிவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இப்பாடங்கள் மாணவர்களின் வயதுக்கும் புரிதலுக்கும் ஏற்ற வகையில், கவனமாகவும் சுவாரசியமாகவும் கற்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.
மேலும், பள்ளிகளில் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவ, பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றார். இதற்குப் போதிய நிதியும் கால அவகாசமும் தேவைப்படுவதால், இடைக்காலத்தில் பொதுமக்களிடையே மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு, வீட்டில் அளவுக்கு அதிகமான கல்வி அழுத்தம் கொடுப்பதும், பள்ளிகளில் துன்புறுத்தல் மற்றும் தகாத நடத்தைகளும் முக்கியக் காரணங்களாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பெற்றோர்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், பிள்ளைகளுக்குப் போதிய நேரம் ஒதுக்கி, அன்பும் அரவணைப்பும் வழங்கி, அவர்களைச் சரியான முறையில் வழிநடத்த வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.



