முஸ்லீம்களை இழிவுபடுத்தி வீடியோ: மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சிங்கப்பூரியர் கைது

சிங்கப்பூர், ஆகஸ்ட்-7- இணையத்தில் முஸ்லீம்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்ட 27 வயது சிங்கப்பூர் இளைஞர் மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, சிங்கப்பூர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 1-ஆம் தேதி அந்நபருக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே மலேசியாவுக்குத் தப்பிச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மலேசியப் போலீஸாரின் உதவியுடன் அவர் நேற்று சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், விமான நிலையத்திலேயே கைதுச் செய்யப்பட்டார்.
அவர், சமூக வலைத்தளங்களில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிட்ட வழக்கில் இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார்.மேலும், பொதுப் பேருந்தில் திருக்குர்ஆனை மிதிப்பது போன்ற வீடியோ தொடர்பாகத் தனியாக நடைபெறும் விசாரணையிலும் அவர் உதவி வருகிறார்.
மற்றொரு மதத்தை இழிவுபடுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால், சிங்கப்பூர் சட்டப்படி அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.இன மற்றும் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிங்கப்பூர் போலீஸ் எச்சரித்துள்ளது.



