கோலாலம்பூர், மே 13 – வங்காளதேசத்தின், சிட்டகாங் கடற் பகுதியில், கடந்த வாரம், “பைலட் ஏணியை” பொருத்தும் போது, கடலில் விழுந்ததாகக் கூறப்படும், மலேசிய கப்பல் பணியாளர் ஒருவரின் சடலம், மீட்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த 31 வயது ஆடவரின் சடலம், நேற்று மீட்கப்பட்டதை, தீபகற்ப மலேசியாவின், கடற் பயணம் செய்வோருக்கான தேசிய சங்கத்தின் செயலாளர், அஜாம் தனராஜ் அப்துல்லா உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், அச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாரை சந்தித்த பின்னரே, அது குறித்த மேல் விவரங்களை வெளியிட முடியுமென தனராஜ் கூறியுள்ளார்.
தற்சமயம், உயிரிழந்தவரின் சடலம், சவப் பரிசோதனைக்காக வங்காளதேசத்தில் தான் உள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, வாங்காளதேச கடற்பகுதியில் விழுந்து காணாமல் போன தனது சக பணியாளரை பாதுகாப்பாக மீட்க மலேசியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டுமென கோரி, X சமூக ஊடக பயனர் ஒருவர் தனது @DanialDDD எனும் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
சம்பவ இடத்தில், கடலின் சூழலை குறிக்கும் காணொளி ஒன்றையும் அவர் அந்த பதிவில் இணைந்திருந்தார்.