Latestமலேசியா

வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க 1100 புத்தகங்கள் 25 தமிழ்ப்பள்ளிகளுக்கு அன்பளிப்பு

கோலாலம்பூர், ஜூலை 17 – மலேசியத் தேசிய நூலகத்தின் மூலம் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சகம் தமிழ்ப் பள்ளிகளுக்கான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும், நாடு தழுவிய நிலையில் பள்ளி நூலகத்தில் புத்தகங்களை அதிகரிக்கும் இலக்குடனும் இந்நிகழ்ச்சி நடைபெற்றதாக, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி விவரித்தார்.

மலேசியத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றம், தமிழ் எழுத்தாளர் இயல் மன்றம் ஆகியவற்றின் கூட்டமைப்பில் இந்நிகழ்ச்சி தமிழ்ப்பள்ளிகளுக்காகப் பிரத்தேயகமாக நடைபெற்றதாக அதன் தலைவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, இன்றைய நிகழ்ச்சியில் 11 தமிழ்ப்பள்ளிகளுக்கு நேரடியாக புத்தகங்கங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்நிகழ்வில் ‘Dariku Untukmu’ எனும் புத்தக வங்கித் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

புத்தகங்களை வாசித்த பின், அதனை ஒரு மூலையில் வைத்து விடாமல், புத்தக வங்கித் திட்டத்திற்கு அன்பளிப்பாக வழங்கலாம் என துணையமைச்சர் அறிவுறுத்தினார்.

புத்தகங்களை வழங்க விருப்பப்படுவோர் அதனை தேசிய நூலகத்தில் ஒப்படைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

வாசிக்கும் பழக்கத்தின் வாயிலாக சிறந்த தலைமுறையை உருவாக்கும் குறிக்கோளுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புத்தகங்களைப் பெற்ற ஆசிரியர்கள் வணக்கம் மலேசியாவிடம் நன்றியினைப் பகிர்ந்து கொண்டனர்.

எதிர்வரும் ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை பெர்லிஸ், பினாங்கு, கெடா, பேராக், சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் மற்றும் கோலாலம்பூரில் இந்த புத்தக வங்கி திட்டம் நடைபெறும்.

ஆகவே இத்திட்டத்திற்கு பொது மக்கள் முழு ஆதரவை வழங்க வேண்டும் என்று துணையமைச்சர் சரஸ்வதி கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!