
பாங்கி, ஆக. 4 -இதுவரை பணிவாய்ப்பு பெறாத தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சி (திவெட்) பட்டதாரிகள், தங்களது வேலைவாய்ப்புச் சாத்தியக்கூறுகளை உயர்த்திக் கொள்ள ‘மைஃபியூச்சர்ஜாப்ஸ்’ (MYFutureJobs) இணையதளத்தைப் பரவலாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மனிதவள அமைச்சு, சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) வாயிலாக நிர்வகிக்கும் இத்தளம், நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு வேலை வழங்குநர்களின் வாய்ப்புகளை ஒருங்கிணைத்து வழங்கி, பட்டதாரிகளின் தொழில்வாழ்க்கைக்குச் சிறந்த தொடக்கப்புள்ளியாக அமைகிறது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
“வேலை தேடுவதில் சிரமத்தைச் சந்திக்கும் பட்டதாரிகள், மனிதவள அமைச்சு வழங்கியுள்ள ‘MYFutureJobs’ தளம் வாயிலாகத் தாராளமாக விண்ணப்பிக்கலாம்,” என்று இங்குள்ள மனிதவளத் துறையின் (JTM) கீழ் இயங்கும் மேம்பட்ட தொழில்நுட்பப் பயிற்சி மையத்தின் (Adtec) 29-ஆவது பட்டமளிப்பு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
தொழில்துறையில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை தொடர்ந்து நிலவி வரும் சூழலில், திவெட் பட்டதாரிகளின் தகுதிக்கும் திறனுக்கும் ஏற்ற பணிவாய்ப்புகளைப் பெற்றுத்தர அரசாங்கம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, Adtec JTM மையத்தின் பட்டதாரிகளுக்குத் தொழில்துறையில் உயரிய அங்கீகாரம் கிடைத்து வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அவர்களின் வேலைவாய்ப்பு விகிதம் 95.5 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும், அவர்களின் செயல்திறனில் முதலாளிகளின் திருப்தி நிலை 97.2 சதவீதமாகப் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பட்டதாரிகளின் ஆரம்ப ஊதியம் துறைக்கு ஏற்ப மாறுபட்டாலும், குறிப்பாகக் கடல்சார் போன்ற குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்கள், வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகள் மற்றும் படிகளுடன் சேர்த்து மாதத்திற்கு 4,000 ரிங்கிட்டிற்கும் அதிகமான ஊதியத்தைப் பெறுகின்றனர் என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், ‘Perodua’, ‘Huawei’ மற்றும் ‘7-Eleven’ போன்ற முன்னணி பெருநிறுவனங்கள் Adtec JTM பட்டதாரிகளுக்குப் பணிவாய்ப்புகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது இந்நிறுவனம் அளிக்கும் பயிற்சியின் தரம் மீது தொழில்துறையினர் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்றார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற Adtec JTM பட்டமளிப்பு விழாவின் முதல் அமர்வில் அமைச்சர் ரமணன் கலந்துகொண்டார். இதில் சுமார் 1,400 பட்டதாரிகளில் முதற்கட்டமாக 637 பேர் சான்றிதழ்களைப் பெற்றனர்.
நாடு முழுவதிலும் உள்ள 33 JTM வளாகங்கள் மற்றும் இரண்டு துணை வளாகங்களைச் சேர்ந்த மொத்தம் 8,255 பட்டதாரிகள் பல கட்டங்களாக நடைபெறும் இவ்வாண்டின் பட்டமளிப்பு விழாவில் சான்றிதழ்களையும் டிப்ளோமாக்களையும் பெறுகின்றனர்.



