
கோத்தா பாரு, செப்டம்பர்-6,2014-ஆம் ஆண்டில் அப்போதைய பாரிசான் நேஷனல் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு சக்தி ஒன்று உதவ முன்வந்ததாகவும், ஆனால் பாஸ் கட்சி அதனை நிராகரித்து விட்டதாகவும் அதன் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
கிளந்தான், கோத்தா பாருவில் நடைபெற்ற பாஸ் கட்சியின் 72-ஆவது பொதுப் பேரவையின் நிறைவால் பேசுகையில் அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா வந்திருந்தபோது, பாஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான டத்தோ ஸ்ரீ தாக்கியுடின் ஹசான் மற்றும் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சம்சூரி மொக்தார் ஆகியோர் அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டதாக ஹாடி கூறினார்.
அக்கூட்டத்தில் அப்போதைய ஆட்சியை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்ற அமெரிக்கத் தரப்பு உதவத் தயாராக இருந்ததாம்…ஆனால் பாஸ் தலைவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக ஹாடி அவாங் கூறிக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பிரதமராக யாரை முன்மொழிகிறீர்கள் என அமெரிக்க தூதர் கேட்டதற்கு, “அமெரிக்கா யாரை ஆதரிக்கிறது?” என தாம் திருப்பிப் கேட்டதாகவும் அவர் சொன்னார்.
எது எப்படி இருப்பினும், மலேசிய அரசியலில் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீட்டையும் பாஸ் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என ஹாடி அவாங் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.



