
கோலாலம்பூர்-புற்றுநோய் மருந்தியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார் 33 வயதான டாக்டர் தனுஷா கணேசன். முனைவர் பட்ட ஆய்வில் புத்திசாலித்தனத்தைவிட, தோல்விகளைக் கடந்து மீண்டும் முயற்சிக்கும் மனஉறுதியே முக்கியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் பயின்ற தனுஷா, பேராசிரியர்களின் வழிகாட்டுதலால் மருந்து ஆராய்ச்சித் துறையில் ஆர்வம் கொண்டார். டாக்டர் அஜந்தாவின் மேற்பார்வையில் முதுகலைப் படிப்பைத் தொடர்ந்து, ஆராய்ச்சி மானியத்தின் உதவியுடன் புற்றுநோய் மருந்தியலில் முனைவர் பட்டத்தையும் அவர் நிறைவு செய்தார்.
முழுநேர ஆராய்ச்சிப் பணி தனிமையும் சவால்களும் நிறைந்தது என்று குறிப்பிட்ட அவர், ஆய்வில் பலமுறை தோல்விகளைச் சந்தித்தாலும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்வதே முக்கியம் என்றார். தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவதுதான் ஓர் ஆய்வாளரின் பலம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தற்போது சர்வதேச மருந்துத் துறையில் மருத்துவ விவகாரப் பிரிவு (Medical Affairs) நிபுணராகப் பணியாற்றும் தனுஷா, முனைவர் பட்டம் பெற்றவர்கள் கல்வித் துறையில் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற எண்ணம் தவறானது என்பதைத் தனது பயணத்தின் மூலம் நிரூபித்துள்ளார். மருந்துத் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் வணிகத் துறைகளை இணைத்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தனது சாதனைக்குப் பெற்றோர், முனைவர் பட்டம் பெற்றுள்ள அண்ணன், வருங்காலக் கணவர் டேனி, நண்பர்கள் மற்றும் ஆய்வு மேற்பார்வையாளர்கள் வழங்கிய ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். விடாமுயற்சியும் சரியான வழிகாட்டுதலும் இருந்தால் கடினமான ஆராய்ச்சிப் பயணத்தையும் வெற்றிகரமாகக் கடக்க முடியும் என்பதற்கு டாக்டர் தனுஷா சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.



