Latestமலேசியா

6 கோடி ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் இவ்வாண்டு 5 மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுக்கும் மித்ரா

கோலாலம்பூர், ஆகஸ்ட்-17, அரசாங்கத்தின் இந்திய சமூக உருமாற்ற பிரிவான மித்ரா (MITRA) இவ்வாண்டு முதல் கட்டமாக நடத்துவதற்காக பல மக்கள் நலத் திட்டங்களை வரைந்துள்ளது.

அத்திட்டங்கள்
தொழில்முனைவு மற்றும் தொழில் வாய்ப்பு, மனித மூலதனம், சமூக வளப்பம் ஆகிய 3 முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்தும்.

தொழில்முனைவுத் திட்டத்தின் கீழ் 654 இந்திய இளைஞர்களை கனரக லாரி ஓட்டுநர்களாக உருவாக்கி அவர்களின் வருமானத்தைப் பெருக்க உதவுவதற்காக 15 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மனித மூலதனத்தின் கீழ், சுமார் 4,545 தனியார் பாலர் பள்ளி மாணவர்களுக்கு 1 கோடி ரிங்கிட்டில் நிதியுதவி வழங்கப்படும்.

4 முதல் 6 வயதிலான மலேசிய இந்திய சிறார்களுக்கு ஆரம்பக் கல்வி வாய்ப்பு கிடைப்பதை உறுதிச் செய்வதுடன், 2024/2025 பள்ளி தவணைக்கான B40 குடும்பங்களின் சுமையைக் குறைப்பதையும் அது நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதோடு அரசு மற்றும் தனியார் உயர் கல்விக் கூடங்களில் முதலாம் இரண்டாம் ஆண்டுகளில் பயிலும் 12,000 இந்திய மாணவர்களுக்கு one-off முறையில் நிதியுதவி வழங்கப்படும்.

அவர்களுக்கு தலா 2,000 ரிங்கிட் நிதியுதவியும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3,000 ரிங்கிட்டும் ஒரு தடவை வழங்கப்படும்.

சமூக வளப்பத் திட்டத்தின் கீழ், மித்ரா டையலிசிஸ் மானிய உதவிக்கு 80 லட்சம் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

B40, M40 குடும்பங்களைச் சேர்ந்த 800 சிறுநீரக நோயாளிகளுக்கு ஓராண்டுக்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது தவிர, Bantuan Sinar Cahaya MITRA என்ற புதிய உதவியும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

அதன் கீழ், பேரிடர் நிதியுதவி, தற்காலிக இருப்பிட உதவி, இறப்பு நிதி, தாய்மார்களுக்கான பிரசவ உதவி போன்றவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தமாக 6 கோடி ரிங்கிட் செலவிலான மேற்கண்ட 5 திட்டங்களும் இந்த இடைபட்ட காலத்திலேயே மேற்கொள்ளப்படும்.

அது குறித்து முழு விவரங்கள் மித்ரா அகப்பக்கத்தில் விரைவில் இடம்பெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!