Latestமலேசியா

70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனை இல்லை – போக்குவரத்து அமைச்சு அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை-16-70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு, வயது அடிப்படையிலான கட்டாய மருத்துவப் பரிசோதனைகளை அமுல்படுத்தும் திட்டம் எதையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை.

போக்குவரத்து அமைச்சு அதனை மக்களவையில் அறிவித்துள்ளது.

இன்றைய கேள்வி நேரத்தின்போது உரையாற்றிய போக்குவரத்துத் துணை அமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹபிபொல்லா (Hasbi Habibollah), 70 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதை மலேசிய சாலைப் பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் (MIROS) ஆய்வுகள் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

2025-ஆம் ஆண்டு அரச மலேசியப் போலீஸ் படை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் பதிவான மொத்த சாலை விபத்துகளில் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் பங்களிப்பு வெறும் 3.5 விழுக்காடு மட்டுமே ஆகும்.

மாறாக, 16 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரே 69.4 விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாக இருந்துள்ளனர்.

இதில் 16 முதல் 20 வயதுக்குட்பட்டவர்களே 6,157 விபத்துகளுடன் முதலிடத்தில் உள்ளனர் என்றார் அவர்.

வயதைக் காரணம் காட்டி மருத்துவப் பரிசோதனைகளைக் கட்டாயமாக்குவது மூத்த குடிமக்களின் நடமாட்ட சுதந்திரத்தைப் பாதிக்கும் என அவர் சொன்னார்.

எனினும், வணிக ரீதியிலான பொது வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கான மருத்துவப் பரிசோதனை விதிகள் வழக்கம் போல் தொடரும் என துணையமைச்சர் தெளிவுப்படுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!