
மலேசியாவுக்கு வேலைக்குச் சென்ற தமது தாயாரைக் கண்டுபிடித்துக் கொடுக்கக் கோரி தமிழகம் நெல்லையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். 9 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவுக்கு வீட்டு வேலைக்காகச் சென்ற தமது தாயார் சுடலியை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என ஞானசௌந்தர்யா எனும் அப்பெண் வெளிநாடு வாழ் தமிழகர்கள் நலச் சங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளதாக Polimer News செய்தி வெளியிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு தமது அண்டை வீட்டுக்காரர் மூலம் சுடலி மலேசியாவுக்கு விட்டு வேலைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மூன்றே மாதத்தில் சம்பளப் பிரச்னை காரணமாக சுடலி வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக அவரை வீட்டு வேலைக்கு அமர்த்திய மலேசிய நபர், ஞானசௌந்தர்யாவிடம் தகவல் கூறியிருக்கிறார்.
தொடக்கத்தில் தமது தாயாருக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் பின்னர் குறிப்பிட்ட தொகை தமது தந்தையின் வங்கிக் கணக்கில் போடப்பட்டதாகவும் ஞானசௌந்தர்யா தெரிவித்தார். தாயாரிடம் பேச அவர் முயன்ற நிலையில், அது ஈடேறாமல் போனது. அதன் பின்னர் தமது தாயார் காணாமல் போய் விட்டதாகவும் வீட்டை வெளியேறிய சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும், காவல் துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக ஞானசௌந்தர்யா கூறினார். அதற்கான எந்த ஆதாரமும் தங்களிடம் காட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தாயாரை மீட்டுத் தரக் கோரி ஞானசௌந்தர்யா இதுவரை மாவட்ட ஆட்சியாளர் தொடங்கி தூதரகம் வரை மனு அளித்துள்ளார். எனினும் அதற்கு இதுவரை பலனேதும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், தமிழக முதலமைச்சர் இதில் தலையிட்டு தூதரகம் வாயிலாகத் தமது தாயாரைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என Polimer Newsசிடம் கண்ணீர் மல்கப் பேட்டியளித்தார்.



