உத்தர பிரதேசம், ஏப்ரல்-3, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு காரை வரதட்சணையாகக் கேட்டுக் கொடுமைப்படுத்திய குடும்பம், கடைசியில் மருமகளை அடித்தே கொன்றிருக்கிறது.
நொய்டாவில் உள்ள கிராமத்தில் நிகழ்ந்த இத்துயரச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லப்பட்டவரான கரிஷ்மா என்ற பெண்ணுக்கு 2022-ஆம் ஆண்டு விகாஸ் என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது.
அப்போதே, விகாசுக்கு வரதட்சணையாக காரும், 21 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டது.
இருவருக்கும் ஒரு பெண் குழந்தைப் பிறந்து விட்ட நிலையிலும், கூடுதல் வரதட்சணைக் கேட்டு கரிஷ்மாவை விகாசும் அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
புகுந்த வீட்டில் மகள் துன்புறுவதைப் பார்க்க இயலாத கரிஷ்மாவின் குடும்பம் எப்படியோ பணத்தைத் திரட்டி, விகாசின் குடும்பத்துக்கு மேலும் 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தைக் கொடுத்தது.
பிரச்சனை தீர்ந்தது என கரிஷ்மா நிம்மதி அடைந்த வேகத்தில், தங்களுக்கு வரதட்சணையாக மேலும் 21 லட்சம் ரூபாயும் Toyota Fortuner காரும் வேண்டும் எனக் கூறி கணவரின் குடும்பம் கொடுமைப்படுத்தியுள்ளது.
வரதட்சணை பிரச்னை பெரிதாக வெடிக்க, கடந்த வெள்ளியன்று விகாசும் அவரது அம்மாவும் சேர்ந்து கரிஷ்மாவை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதையடுத்து கரிஷ்மா, தனது சகோதரரான தீபக்கை தொடர்புகொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார்.
பதறிப் போய் தீபக் வந்து பார்த்த போது கரிஷ்மா பிணமாகக் கிடந்துள்ளார்.
இது தொடர்பாக தீபக் போலீசில் புகார் அளிக்க, கொலை வழக்கைப் பதிவுச் செய்த போலீசார், விகாசையும் அவரது தந்தையையும் கைதுச் செய்தனர்.
தப்பியோடிய கரிஷ்மாவின் மாமியார் மற்றும் நாத்தனாரை போலீசார் தேடி வருகின்றனர்.