கோலாலம்பூர், ஜூன் 19 – பசுமை தொழிநுட்ப திட்டங்கள், பயோடீசல், நானோ தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானத் துறைகளில், முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களை கவரும் வகையில், டத்தோ ஸ்ரீ பட்டம் கொண்ட நபர் ஒருவரின் பின்னணியில் செயல்படும் கும்பல் ஒன்று, பென்ட்லி (Bentley) சொகுசு காரை பயன்படுத்தி வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, முதலீடு செய்ய விருப்பம் உள்ளவர்களை அணுகும் போது, அவர்களை நம்ப வைக்க ஏதுவாக அக்கும்பல் அக்காரை பயன்படுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
மாறாக, அக்காரை உள்நாட்டு பொது பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவரும் இதற்கு முன் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
அதனால், அக்கார் தொடர்பில் போலீஸ் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக, வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஸ்ரீ ரம்லி முஹமட் யூசோப் தெரிவித்தார்.
அச்சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் டத்தோ ஸ்ரீ பட்டதை கொண்ட நபரையும், அக்கும்பலின் ஆலோசகராக செயல்பட்டதாக நம்பபப்டும் சம்பந்தப்பட்ட பெண் விரிவுரையாளரையும் போலீஸ் தேடி வரும் வேளை ; டத்தோ ஸ்ரீ பட்டம் கொண்ட நபர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
டென்மார்கில் 20 ஆண்டுகள் தங்கி, முனைவர் பட்டப் படிப்பை முடித்துள்ளதாக கூறும் அந்நபர், பல்வேறு துறைகளில் அனுபவமும், ஆற்றலும் இருப்பதாக கூறி நிறுவனம் ஒன்றை தோற்றுவித்து, அதன் வாயிலாக, முதலீடு செய்தவர்களின் பணத்தை ஏமாற்றியுள்ளதும் தெரிய வந்துள்ளது.