ஜெலி, அக்டோபர்-18, கிளந்தான், ஜெலியில் புலியின் கோரத் தாக்குதலில் உயிரிழந்ததாக நம்பப்படும் மியன்மார் ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் குடியிருப்பிலிருந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 12 மணி நேரங்களுக்குப் பிறகு, பத்து மெலிந்தாங், கெரிக்-ஜெலி கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் மிளகாய் தோட்டமருகே உள்ள காட்டுப் பகுதியில், நேற்று காலை அவர் இறந்துகிடந்தார்.
உடல் முழுக்க கடித்துக் குதறியக் காயங்கள் இருந்ததோடு, இடது தொடை துண்டாகி கிடந்தது.
பாதையில் சற்று தூரத்திற்கு இரத்தக் கறைகள் காணப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது, புலியிடமிருந்து தப்பிக்க அவ்வாடவர் கடுமையாகப் போராடியிருக்க வேண்டுமென ஜெலி மாவட்ட போலீஸ் கூறியது.
இதையடுத்து அச்சம்பவம் திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் கடந்த 3 நாட்களில் புலி தாக்கியதால் ஏற்பட்ட இரண்டாவது மரணம் இதுவாகும்.
செவ்வாய்க்கிழமை பேராக், கெரிக்கில் உள்ள காட்டுப் பகுதியில் 54 வயது உள்ளூர் ஆடவரை, மனைவியின் கண்ணெதிரிலேயே புலி அடித்துக் கொன்றது.