
MACC தலைவர் அசாம் பாக்கியை நீக்க கோரிக்கைகளை நிராகரித்த அன்வார்
கோலாலம்பூர், பிப்ரவரி-12,
MACC என்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அசாம் பாகியை அரசாங்கம் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்துள்ளார். MACC தலைமை ஆணையராக தனது பொறுப்புகளை சிறப்பாகச் செய்ததற்காக பாராட்டிய அசாம் பாகியை நீக்க வேண்டியதன் அவசியம் குறித்து அன்வார் கேள்வி எழுப்பினார்.
யாராவது தங்கள் வேலையைச் செய்தால், அவர்களை ஏன் பணிநீக்கம் செய்ய வேண்டும்? அவரது பங்குகள் பற்றிய அவரது அறிக்கையின் விளக்கத்தைப் படியுங்கள் என சீன வர்த்தக மற்றும் தொழில்துறை சபைகளின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசியபோது அன்வார் தெரிவித்தார்.
அசாம் மீது கூறப்படும் குறைகூறல் அல்லது விமர்சனம் ஆரோக்கியமற்றது என்பதோடு தீர்ப்பை வழங்குவதற்கு முன் இந்த விவகாரத்தில் MACC தலைவரின் விளக்கத்தைப் பார்க்குமாறு அனைத்து தரப்பினரையும் அன்வார் கேட்டுக்கொண்டார். சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்காமல், உண்மைகளைக் கருத்தில் கொள்ளாமல் முடிவுகளை எடுக்கக்கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிறுவனத்தின் வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில், வேலாசிட்டி கேபிடல் பெர்ஹாட்டில் அசாம் 17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாகக் புலும்பெர்க் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து MACC தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டுமென பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திற்கு கோரிக்கை எழுப்பியிருந்தனர்.



