
ஷா ஆலாம், மார்ச்-1-சிலாங்கூரில், அரசுப் பணியாளர்களில் அதிக கடன் சுமையால் திவாலானோர் எண்ணிக்கையில் ஆசிரியர்களே அதிகம் என தேசிய திவால் துறை தெரிவித்துள்ளது.
2021 முதல் 2025 வரை, நாட்டிலேயே மிக அதிகமாக சிலாங்கூரில் மட்டும் 687 அரசுப் பணியாளர்கள் திவாலான வேளை, இந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 85 ஆசிரியர்கள் திவாலாகினர்.
அந்த 85 பேரில் 50 பேர் பெண்களாவர்.
தனிநபர் கடன்கள், அதிக வட்டி சுமைகள் இதற்கு முக்கிய காரணம் என அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ இஷாக் பக்ரி கூறினார்.
ஆசிரியர்கள் பெரும்பாலும் கடன் உத்தரவாதம் அளிப்பது, சமூக அழுத்தத்தால் மோசடி முதலீடுகளில் ஈடுபடுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடன் விண்ணப்பங்களை கடுமையாக பரிசீலிக்கவும், அனைத்து ஆசிரியர்களுக்கும் நிதி அறிவியல் பயிற்சி கட்டாயமாக்கவும் பொருளாதார நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.



