
கோலாலாம்பூர், மார்ச்-3-அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட வான் தாக்குதல்களைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை இன்று ஐந்தாவது நாளாக தொடர்ந்து உயர்ந்துள்ளது.
நடப்பு விலை 1 விழுக்காடு உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் RM678 என்ற விலையில் பதிவாகியது.
ஈரானுக்கு எதிராக வார இறுதி தாக்குதல்களுக்குப் பின்னர், முந்தைய பரிவர்த்தனையில், தங்கக் கட்டிகள் 4 வாரங்களில் புதிய உச்சத்தை எட்டின.
ஏப்ரல் மாத விநியோகத்திற்கான அமெரிக்க தங்க விலை கிராமுக்கு RM680 வரை உயர்ந்துள்ளது.
தங்கத்துடன், வெள்ளி விலை 1.4% உயர்ந்து 90.67 என்ற அளவிலும், பிளாட்டினம் 0.6% உயர்ந்து 2,316.50 டாலர் என்ற அளவிலும் பதிவாகியுள்ளன.
ஈரான், Hormuz நீரிணையை மூடி, அந்த வழியாக செல்லும் எந்தக் கப்பலையும் தாக்குவோம் என எச்சரித்துள்ளது.
இது நடந்தால் உலகளாவிய எண்ணெய் வினியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு பாதிக்கப்பட்டு, எண்ணெய் மற்றும் தங்க விலை எகிறலாம்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திட்டம் “உடனடி அச்சுறுத்தல்” எனக் கூறி, தாக்குதலைத் தொடருவதாகவும், “பெரும் அலை” போல மேலும் தாக்குதல்கள் வரும் என எச்சரித்துள்ளார்.
இந்தப் போர், ஈரான், இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் பொது மக்கள் உயிரிழப்பை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய விமான போக்குவரத்து மற்றும் கடல் போக்குவரத்தையும் பாதித்துள்ளது.



