
கோலாலாம்பூர், மார்ச்-5-நாட்டில் இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேம்படுத்த தேசிய அல்லது மாநில அளவில் இந்து அறப்பணி வாரியங்களை அமைப்பதே சிறந்த தீர்வாகும் என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமி கூறுகிறார்.
இது, பதிவுச் செய்யப்படாத கோயில்கள், நில உரிமை பிரச்னைகள் மற்றும் நிர்வாக சிக்கல்கள் போன்ற பல பிரச்னைகளைத் தீர்க்க உதவலாம் என்றார் அவர்.
தற்போது, பல இந்துக் கோயில்கள் ROS எனப்படும் சங்கப் பதிவிலாகாவில் பதிவுச் செய்யப்பட்ட அமைப்புகளாகவோ அல்லது அறவாரியங்களாகவோ, அல்லது பினாங்கு இந்து அறப்பணி வாரியத்துடன் இணைந்த அமைப்புகளாகவோ இயங்குகின்றன.
சமயம் சார்ந்த நிர்வாகம் வழக்கமாக மாநில அதிகாரத்தின் கீழ் இருந்தாலும், இந்து அறப்பணி வாரியம் மத்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் தான் செயல்படும்.
உதாரணமாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியம் மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ளது; என்றாலும் பினாங்கு அரசின் கீழ் தான் அது பராமரிக்கப்படுகிறது; அதன் கணக்குகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை, அவ்வாரியத்தின் முன்னாள் தலைவருமான ராமசாமி சுட்டிக் காட்டினார்.
ஆக, சட்டப்பூர்வ அதிகாரம் கொண்ட இந்து அறப்பணி வாரியங்கள் உருவாக்கப்பட்டால் கோயில்களை சட்டப்பூர்வமாக்கவும், அவற்றின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தவும் உதவும்.
ஆனால், இந்த வாரியங்கள் மத அமைப்பாக அல்லாமல் நிர்வாக அமைப்பாக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும் ராமசாமி வலியுறுத்தினார்.
எது எப்படி இருந்தாலும், கோயில்களின் பதிவு, நில உரிமை மற்றும் நிர்வாகப் பிரச்னைகளை தீர்க்க அரசியல் ரீதியான மனப்பாங்கு அவசியம் என்றும் ராமசாமி குறிப்பிட்டார்.



