
கோலாலாம்பூர், மார்ச் -31-சீனாவின் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான BYD, பேராக், தஞ்சோங் மாலிமில் EV தொழிற்சாலையை நிர்மாணிக்கும் திட்டத்திலிருந்து பின்வாங்கக் கூடுமென்ற தகவல் தொடர்பில், முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சான MITI சில முக்கிய விளக்கங்களை அளித்துள்ளது.
BYD-க்கு விதிக்கப்பட்ட உரிம நிபந்தனைகள் தொடர்பில் இணையத்தில் துல்லிதமில்லாத பலதரப்பட்ட தகவல்கள் பரவி வருவதால், நிலைமையைத் தெளிவுப்படுத்த வேண்டியது தனது கடமை என, அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜொஹாரி கானி தெரிவித்தார்.
BYD-க்கு 2025 செப்டம்பரில் தற்காலிக உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டது; வாகன உற்பத்தி, ஏற்றுமதி நோக்கத்துடன் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
இவை, தேசிய மோட்டார் வாகனக் கொள்கை மற்றும் 2030 புதியத் தொழில்துறை பெருந்திட்டத்திற்கு ஏற்ப இருக்க, உயர்தர செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், சந்தை சீர்குலைவதைத் தடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டவை.
“இந்த நிபந்தனைகள் BYD-க்கு மட்டும் அல்ல; 2025 செப்டம்பர் மாதத்திலிருந்து மலேசியாவில் உள்ள அனைத்து புதிய மோட்டார் வாகன முதலீடுகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உள்ளூரில் உபரிப்பாகங்களை பொருத்தி ஏற்கனவே பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என ஜொஹாரி விளக்கினார்.
இவ்வேளையில், BYD நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்திற்கு கூடுதல் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன; அதாவது, 100,000 ரிங்கிட் என்ற குறைந்தபட்ச விலையில், உள்ளூர் சந்தையில் 10,000 யூனிட்கள் அல்லது தொழிற்சாலையின் மொத்த உற்பத்தி திறனின் 20% விற்கப்பட வேண்டும்.
ஆனால், இணையத்தில் வெளியான தகவல்களில் “உள்ளூரில் தயாரிக்கப்படும் BYD கார்கள் 20% மட்டுமே விற்கப்படலாம் என்றும், அவை RM200,000-க்கு மேல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும்” என்றும் கூறப்பட்டுள்ளது; இது தவறான தகவல் என ஜொஹாரி சொன்னார்.
“இது கூட ஒரு கட்டுப்பாடு அல்ல; மாறாக பரஸ்பர ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உற்பத்தி வடிவமைப்பு”, என்றார் அவர்.
எது எப்படி இருந்தாலும், சீன மோட்டார் வாகன நிறுவனங்கள் மலேசியாவில் முதலீடு செய்வதற்கு கதவுகள் எப்போதும் போல திறந்தே உள்ளன.
ஏற்கனவே நாட்டில் செயல்பட்டு வரும் 34 வெளிநாட்டு கார் நிறுவனங்களில் 14 நிறுவனங்கள் சீனாவைச் சேர்ந்தவை என்பதையும் அவர் ஜொஹாரி சுட்டிக் காட்டினார்.



