
ஜோர்ஜ்டவுன், ஏப்ரல்-20-கணிதம் என்றாலே பலருக்குக் கசக்கும்.
ஆனால் பினாங்கைப் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர், கணிதத்தின் முடிவில்லா எண்ணான ‘பை’ (π)-யின் 300 இலக்கங்களை துல்லியமாக மனப்பாடம் செய்து ஒப்புவித்து மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
பினாங்கு செயின்ட் ஜோர்ஜ் பெண்கள் இடைநிலைப் பள்ளியின் இரண்டாம் படிவ மாணவி கே. பூண்யமித்ரா, கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அச்சாதனையைப் படைத்தார்.
இதையடுத்து, ஜோர்ஜ்டவுனில் உள்ள ஸ்ரீ குஞ்ச் பிஹாரி ( Sri Kunj Bihari) கோவிலில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், இதற்கான அங்கீகாரச் சான்றிதழை ‘Malaysia Book of Records’ நிறுவனத்திடமிருந்து அவர் பெற்றுக் கொண்டார்.
இந்தச் சாதனைக்காக, பூண்யமித்ரா நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 10 எண்களை மனப்பாடம் செய்வதை இலக்காகக் கொண்டு, இரண்டு மாதங்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆரம்பத்தில் இது கடினமாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த எண்களின் வரிசை தனக்குப் பழகிப்போனதாக அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.
பூண்யமித்ராவின் இந்தத் திறமை இன்று நேற்றல்ல, கடந்தாண்டு ‘Kids Got Talent Malaysia’ போட்டியில் ‘நினைவாற்றல் தடகள வீரர்’ (Memory Athlete) பிரிவில் வெற்றி பெற்ற போதே மிளிர்ந்ததாக, அவரின் தாயார் S. திலகம் பெருமிதம் தெரிவித்தார்.
தவிர, ஜனவரியில் புகழ்பெற்ற ‘America’s Got Talent’ நிகழ்ச்சிக்கான இணையவழி நேர்முகத் தேர்விலும் அவர் பங்கேற்றுள்ளார்.
அதோடு, கடந்தாண்டு நடைபெற்ற ஆசியான் சாதனைப் போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்தார்.
கணிதத்தில் ‘பை’ (π) என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவுக்கும் அதன் விட்டத்திற்கும் இடையிலான விகிதமாகும்.
பொதுவாக 3.14 என்று நாம் சுருக்கமாகக் கூறும் இந்த எண்ணை, 300 இலக்கங்கள் வரை துல்லியமாகச் சொல்லி அசத்தியுள்ள பூண்யமித்ராவுக்கு பாராட்டுகள் குவிகின்றன…



