
ஷா ஆலாம், ஏப்ரல்-25-சிலாங்கூரில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வரும் 688 இந்து ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மாநில அரசு அடையாளம் கண்டுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராயுடு, இந்த 688 ஆலயங்களில், 433 ஆலயங்கள் அரசு நிலங்களிலும், 255 ஆலயங்கள் தனியார் நிலங்களிலும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மாவட்ட வாரியாகப் பார்த்தால், அதிகபட்சமாக குவாலா சிலாங்கூரில் அத்தகைய 207 ஆலயங்களும், பெட்டாலிங் மாவட்டத்தில் 96 ஆலயங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போது சிலாங்கூரில் 285 இந்து ஆலயங்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக பதிவுச் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த ஆலயங்களை உடனடியாக அகற்றாமல், நீண்டகாலமாக இருக்கும் ஆலயங்களை முறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
சட்டத்தை மதிக்கும் அதேவேளை, சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் வகையில், தற்போதுள்ள இடங்களை அரசால் gazette செய்ய முடியாத பட்சத்தில், அந்த ஆலயங்களை மாற்று இடங்களுக்கு இடமாற்றம் செய்ய நில ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக பாப்பாராயுடு தெரிவித்தார்.



