Latestஉலகம்

அதிரடி திருப்பம்; விஜய் முதலமைச்சராக பதவியேற்பதில் மீண்டும் சிக்கல்; போலி ஆதரவு கடிதம் என தவெக மீது புகார்

சென்னை, மே-9-திரைப்படங்களில் நாம் காணும் அதிரடி மாற்றங்களைப் போல தமிழக அரசியலில் ஒவ்வொரு நாளும் ஓர் அதிரடி மாற்றம் நடந்து வருகிறது.

தேர்தல் முடிவுகள் வெளியாகி தனிப்பெரும் கட்சியாக விஜயின் TVK உருவெடுத்து, 5 நாட்களைக் கடந்தும் அவர் முதல்வராகப் பதவியேற்பாரா இல்லையா என்ற ஒற்றைக் கேள்வியுடன் நொடிக்கு நொடி அதிரடி திருப்பங்களுடன் நாட்கள் நகருகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளித்ததை அடுத்து, நேற்று மாலை 3-ஆவது முறையாக விஜய் ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார்.

இதையடுத்து 120 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் இன்று காலை முதல்வராகப் பொறுப்பேற்பார் என முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

இந்நிலையில், அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் அதிரடி நகர்வால் நேற்று நள்ளிரவில் அரங்கேறிய சம்பவமொன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திடீரென ஆளுநரைச் சந்தித்த தினகரன், தனது கட்சியின் ஒரே எம்.எல்.ஏ. எஸ்.காமராஜ் கடத்தப்பட்டதாக அதிர்ச்சிப் புகார் அளித்தார்.

மன்னார் குடி தொகுதியில் வெற்றிபெற்ற காமராஜை காணவில்லை என்றும், அவரை வைத்து TVK சார்பில் ‘குதிரை பேரம்’ நடப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

​அதோடு, TVK ஆளுநரிடம் அளித்த ஆதரவு கடிதம் ‘போலியானது’ என்றும், அதில் தனது எம்.எல்.ஏ-வின் கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளதாகவும் தினகரன் சாடினார்.

இது குறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தூய சக்தி” எனக் கூறிக்கொள்ளும் விஜய், இப்படிப்பட்ட குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வதா?” என அவர் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், மாயமானதாகச் சொல்லப்பட்ட எம்.எல்.ஏ காமராஜ், ஆளுநர் மாளிகைக்கு நேரில் வந்து, தான் அமமுக-விலேயே நீடிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் கடிதம் வழங்கி பரபரப்பை கூட்டினார்.

இதனிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் விஜய்க்கு ஆதரவளிப்பார்கள் என அதன் தலைவர் தொல்.திருமாவளவன் முன்னதாக அறிவித்திருந்த நிலையில், அதிலும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு அறிவித்த பிறகு திருமாவளவன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பார்க்கச் சென்றதாக பரபரப்பு செய்திகள் வெளியான நிலையில், இதுவரை விஜய்க்கான ஆதரவு குறித்து அதிகாரப்பூர்வ கடிதங்களை அவர் கொடுக்கவில்லை.

இதனால் பெரும்பான்மையை நிரூபிப்பதில் விஜய்க்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்படி அடுத்தடுத்து வரலாறு காணாத அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருவதால் ஆளுநர் இந்த விவகாரத்தில் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

118 பேரின் ஆதரவு இருந்தால் மட்டுமே முதல்வராகப் பதவி பிரமாணம் செய்து வைப்பேன் என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து என்ன நடக்குமோ என்ற கேள்வியுடன், விஜய் முதல்வராவாரா இல்லையா என்ற கேள்வியும் விடையில்லாமால் தொடருகிறது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!