
கோலாலாம்பூர், மே-10-தங்களின் அரசியல் அதிகாரம் குறைந்து வருவதாக மலாய் சமூகத்தில் அச்சம் அதிகரித்து வருவதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.
மலாய்க்காரர்களும் பூமிபுத்ரா சமூகத்தினரும் தங்களின் உரிமைகள் மற்றும் அரசியல் செல்வாக்கு பலவீனப்படுத்தப்படுகின்றன என்ற உணர்வில் இருப்பதாக துணைப் பிரதமர் குறிப்பிட்டார்.
இது இனவாதத்தை தூண்டும் நோக்கமல்ல என்றும், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க இந்த கவலைகளை அரசியல் தலைவர்கள் பொறுப்புடன் அணுக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தக் கவலைகள் குறித்த வட்டமேசை கலந்துரையாடலைத் தொடக்கி வைத்து பேசிய சாஹிட், மலேசியாவின் பல இன ஒற்றுமையை பாதுகாப்பதோடு, அரசியலமைப்பில் வழங்கப்பட்ட மலாய் மற்றும் பூமிபுத்ரா உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்றார்.
தற்போதைய அரசியல் சூழ்நிலையிலும் இன, மத மற்றும் உரிமைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில் சாஹிட்டின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.



