“நீங்க ஷாப்பிங் பண்ணுங்க, நாங்க தூக்குறோம்”; டெல்லி நிறுவனத்தின் புதிய சேவைக்கு இணையத்தில் குவியும் ஆதரவும் எதிர்ப்பும்

புது டெல்லி, மே-27,
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதிகளில் ஷாப்பிங் செய்பவர்களின் சுமையைக் குறைக்க, CarryMen என்ற புதிய நிறுவனமொன்று தொடங்கப்பட்டுள்ளது.
”நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள், நாங்கள் சுமக்கிறோம்” என்ற வித்தியாசமான சுலோகத்துடன் செயல்படும் இந்த நிறுவனம், ஒரு மணி நேரத்திற்கு வெறும் 149 ரூபாய் அதாவது 6 ரிங்கிட் 15 சென் கட்டணத்தில் ஷாப்பிங் உதவியாளர்களை வழங்குகிறது.
இந்த உதவியாளர்கள் வாடிக்கையாளர்களுடன் கடை வீதிகளுக்கு வந்து அவர்களின் கனமான பைகளைச் சுமப்பதுடன், வாகன நிறுத்துமிடம் அல்லது பேருந்து- இரயில் நிலையம் வரை கொண்டு வந்து சேர்க்கின்றனர்.
அதோடு, உங்களுக்காக உணவக வரிசைகளில் நின்று உணவுகளை வாங்கித் தரும் சேவையையும் செய்கிறார்கள்.
கூடுதல் கட்டணமாக குடைகள், கைப்பேசி சார்ஜர்கள் மற்றும் கைக்குழந்தைகளுக்கான prams போன்ற வசதிகளும் வழங்கப்படுகின்றன.
இந்த புதுமையான சிந்தனை தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
“இனி கணவன்மார்களுக்கும், பிள்ளைகளுக்கும் ஷாப்பிங்கில் இருந்து விடுதலை” என பலர் நகைச்சுவையாகக் கூறினாலும், ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் தொழிலாளர் உரிமை குறித்த சில விமர்சனங்களும் எழுந்துள்ளன…



