
வியான்டின், மே-28-லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகை ஒன்றில் ஒரு வாரமாகச் சிக்கியிருந்த ஏழு பேரில் ஐவர் சிறப்பு மூக்குளிப்பாளர்களால் நேற்று உயிருடன் கண்டுப்பிடிக்கப்பட்டனர்.
குகையின் கடைசி இடத்திலிருந்து அவர்களை மீட்பதே அடுத்த சவால் என்று மீட்பாளர்களில் ஒருவர் கூறினார்.
அவர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்களை மீட்புப் பணியாளர்கள் கொண்டுச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
காணாமல்போன மேலும் இருவரை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர் வியான்டினுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள பழைய தங்கச் சுரங்கமான அந்தக் குகைக்குள், லாவோஸ் நாட்டைச் சேர்ந்த எழுவரும் மே 20 ஆம்தேதியன்று நுழைந்தனர்.
அவர்கள் தங்கத்தை தேடிக் கொண்டிருந்தபோது பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு வெளியேறும் வழியை தடுத்ததால் குகையிலிருந்து அவர்கள் வெளியேற முடியவில்லை.
தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள லாவோஸ் குகை அமைப்பானது, பல அடுக்குகளையும் குறுகிய பாதைகளையும் கொண்டு, பூமிக்கு அடியில் ஆழமாக நீண்டுள்ளது.
அதிகாரிகளும் கிராம மக்களும் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று காலையில் குகையில் நீர் மட்டம் கணிசமாகக் குறைந்போதிலும் மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர் என்று அரசு ஊடகங்கள் தெரிவித்தன.



