
செப்பாங், ஜூன்-19-விமானப் பயணத்தின் போது சக பயணியிடம் திருட முயன்ற சீனப் பிரஜை ஒருவருக்கு செப்பாங் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் 5,000 ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை, தீமோர் லெஸ்தே நாட்டின் தலைநகர் டிலியிலிருந்து (Dili) கோலாலம்பூருக்கான விமானத்தில் வைக்கப்பட்டிருந்த கைப்பெட்டிகளை (Carry-on bags) இரகசியமாகத் திறந்து, பணத்தைத் திருட முயன்றபோது 36 வயது Hu Peng கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டார்.
அவர் திருட முயன்றது 58 வயது ஜப்பானியப் பயணிக்குச் சொந்தமான கைப்பெட்டியாகும்.
அவருடன் 39 வயதிலான மற்றொரு சீன ஆடவரும் கைதானார்; ஆனால், பின்னர் அரசு தரப்பு சாட்சியாக மாறியதால் அவர் மீது நடவடிக்கை இல்லை.
Hu Peng, அபராத்தைச் செலுத்தாவிட்டால் 12 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், அவ்வாடவர் அபராதத்தைச் செலுத்தி சிறைவாசத்திலிருந்து தப்பினார்.
விமானப் பயணத்தில் பயணிகள் அசந்து தூங்கும் போது, கைவரிசைக் காட்டும் கும்பலைச் சேர்ந்தவர்களாக அவ்விரு ஆடவர்களும் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.



