
சபா, ஆகஸ்ட் 3 — புதிதாகப் பிறந்த தனது பெண் குழந்தையை புதர் பகுதியில் கைவிட்டதாகக் கூறப்படும் வழக்கில் 15 வயது சிறுமி இன்று தாவாவ் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 21ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில், ஜாலான் குரு, கம்போங் ஜாவா செந்தோசா (Kampung Jawa Sentosa, Jalan Guru) பகுதியில் குழந்தையை கைவிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
நீதிமன்றம், மருத்துவ மற்றும் இரசாயன அறிக்கைகளுக்காக காத்திருக்கும் நிலையில், வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 7ஆம் தேதிக்கு நிர்ணயித்தது.
பொதுமக்கள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து, ஜூலை 21ஆம் தேதி காலை தவாவ், கம்போங் ஜாவா பகுதியில் பிறந்து கைவிடப்பட்ட பெண் குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதே நாளில் சிறுமி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



