
கோலாலம்பூர், ஜூன் 26 – டத்தோ என்று அழைக்கப்படும் ஒருவரால் வழிநடத்தப்பட்ட கும்பல் உட்பட பல போதைப்பொருள் கடத்தல் கும்பல்களை புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை முறியடித்துள்ளது.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட (Op Gaurus) நடவடிக்கையின் மூலம், 6.26 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதோடு , 291 பேர் கைது செய்யப்பட்டனர்.
40 வயதுடைய அந்த சந்தேக நபர் பேரா, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த ஒரு ரகசியக் குழுவின் தலைவராக இருக்கலாம் என்று நம்பப்டுவதாக புக்கிட் அமான் போதைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோ உசேய்ன் ஒமார் கான் ( Datuk Hussein Omar Khan ) தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையின் போது, தூள் மற்றும் திரவ வடிவத்தைக் கொண்ட heroin , போதை மாத்திரைகள் , கஞ்சா உள்பட பல்வேறு வகையான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கடத்தல் கும்பல் போதைப்பொருட்களை மொத்தமாக வாங்கி, பின்னர் அவற்றை பொழுதுபோக்கு மையங்களில் விற்பனை செய்வதற்காக மறுபொட்டல நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் Toyota Vellfire, Mercedes Benz ,உள்ளிட்ட பல்வேறு வகையான கார்கள், இரண்டு ரோலக்ஸ் (Rolex) கைக்கடிகாரங்கள் மற்றும் 4,383 ரொக்கம் ஆகியவையும் இந்த நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் 19 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள் என்பதோடு இவர்களில் ஐந்து பேருக்குப் பல்வேறு வகையான போதைப்பொருட்களின் பயன்பாடு இருப்பதும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக இன்று கோலாலம்பூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உசேய்ன் ஒமார் கான் தெரிவித்தார்.



