
கோலாலம்பூர், ஜூலை-8 -கடந்தாண்டு நவம்பர் மாதம் மலாக்கா, டுரியான் துங்காலில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மூவரின் குடும்பத்தினருக்கு, 8 மாதங்களாகியும் நீதி கிடைக்காதது குறித்து DAP தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சம்பவம் கொலை வழக்காக மறுவகைப்படுத்தப்பட்டும், இதுவரை எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாதது ஏன் என்பதற்கு சட்டத் துறைத் தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் தான் கேள்வி எழுப்பப் போவதாகவும் டிஜிட்டல் அமைச்சருமான கோபிந்த் சிங் தெரிவித்தார்.
இதனிடையே, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் வெளியிட்ட உடற்கூறு ஆய்வு முடிவுகள், துப்பாக்கிச் சூடு மிகவும் அருகிலிருந்தும், கீழ்நோக்கிய கோணத்திலும் நடத்தப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன.
இது தற்காப்புக்காகப் போலீஸார் சுட்டதாகக் கூறப்படும் வாதத்திற்கு முரணாக இருப்பதாகக் கூறி, சம்பந்தப்பட்ட போலீஸார் கைதுச் செய்யப்பட வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விசாரணையில் ஏற்படும் இத்தகைய கால தாமதம், சாட்சியங்களின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதோடு, குற்றவியல் நீதி அமைப்பின் மீதான பொது மக்களின் நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.



