
ஜூலை 10- ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வெளிமாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் ஜோகூர் வாக்காளர்கள் அனைவரும் தாயகம் திரும்பி தங்களின் ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் பெர்சிஹ் 2.0 செயலக மேலாளர் மண்டிப் சிங் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பிரசாரம் நிறைவடைந்துள்ள நிலையில், நாளைய வாக்குப்பதிவு ஜோகூரின் அடுத்த ஐந்து ஆண்டுகால நிர்வாகம், வளர்ச்சி மற்றும் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கியமான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜோகூர் மாநிலத் தேர்தலில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக எல்லைகள் மூடப்பட்டிருந்ததால், பலர் வாக்களிக்க ஊர் திரும்ப முடியாமல், வாக்குப்பதிவு சதவீதம் வெறும் 54.9 விழுக்காடாக மட்டுமே பதிவானது.
, இம்முறை அந்த நிலை இல்லை. சிங்கப்பூர் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், சாலை, பேருந்து, ரயில் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகளும் முழுமையாக செயல்பட்டு வருவதால், வாக்களிக்க முடியாது என்ற காரணத்திற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 2.7 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில், குறிப்பாக கோலாலம்பூர், மலாக்கா, சிங்கப்பூர் மற்றும் பிற பகுதிகளில் வசிக்கும் ஜோகூர்வாசிகள், தங்களின் ஒரு வாக்கு பெற்றோர்கள், பிள்ளைகள் மற்றும் வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடியது என்பதை மறக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நேர்மையும், பொறுப்புணர்வும், மக்களுக்கான அர்ப்பணிப்பும் கொண்ட தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான மிகப்பெரிய ஜனநாயக உரிமை வாக்குரிமை என்பதால், அனைவரும் ஊர் திரும்பி தவறாமல் வாக்களித்து, ஜோகூரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.



