
செலாயாங், ஜூலை.10-செலாயாங்கில் ஐந்தாம் படிவ மாணவி ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்தியிருக்கிறது. அத்துயரச் சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் நிகழ்ந்தது. St Mary இடைநிலைப் பள்ளியின் பயின்று வந்த கிருஷ்ணவேணி ரவி எனும் அம்மாணவி 2 மணியளவில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய போது அழுது கொண்டே வந்ததாக அவரது தாயார் ஆதிலட்சுமி தெரிவித்தார். தொலைபேசியில் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்த தமது மகள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்த நிலையில், சற்று தணிந்ததும் பேசிக் கொள்ளலாம் எனது தாம் அமைதியாக இருந்ததாக அவர் கூறினார்.
சுமார் 4 மணியளவில் கிருஷ்ணவேணி பிறந்தநாளுக்குத் தமது நண்பர்கள் கொடுத்த பரிசுகளை இரு பைகளில் கட்டி, கீழ்தளத்திற்குச் சென்று அவற்றை எரித்துள்ளார். மீண்டும் வீடு திரும்பி தொலைபேசியில் பேசிய அம்மாணவி தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளார். 6 மணியளவில் தமது தம்பியிடம் தாயாரை நல்ல முறையில் பார்த்துக் கொள்ளும்படியும் தமது சில உடைமைகளைப் பயன்படுத்திக் கொள்ளும்படியும் அவர் கூறியுள்ளார்.
இரவு 7.30 மணிக்கு வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்ற கிருஷ்ணவேணி, முன்புறம் இருந்த சுவற்றில் ஏறி கீழே குதிக்க முயன்றுள்ளார். அம்முயற்சி தோல்வியில் முடிய, பின்னர் அவர் துணிக் கூடை மேல் ஏறி நின்று கீழே குதிக்கச் சென்ற போது அவரது தாயார் உரக்கக் கத்தி தடுக்க முயற்சித்துள்ளார். எனினும் அது பலனளிக்கவில்லை என தாயார் ஆதிலட்சுமி கண்ணீர் மல்கக் கூறினார்.
கிருஷ்ணவேணி பள்ளியில் நண்பர்களுடன் சண்டை போட்டிருக்கலாம் என்றும் அவரது அம்முடிவுக்கு அது காரணமாக இருந்திருக்கலாம் என்றும் தாம் நம்புவதாக ஆதிலட்சுமி குறிப்பிட்டார். மகளின் மரணத்தால் துக்கம் அடைந்துள்ள அந்த தனித்து வாழும் தாயார், உண்மைக் காரணம் கண்டறியப்பட வேண்டும் எனவும் தமக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் வேதனையுடன் கூறினார். கிருஷ்ணவேணியைத் தவிர்த்து அவருக்கு மூத்த மகனும் மேலும் இரு சிறு பிள்ளைகளும் இருக்கின்றனர்.



