
பாசிர் மாஸ், ஜூலை 20 – கடந்த ஜூன் மாதம் கிளாந்தான் தும்பாட் (Tumpat) பகுதியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கைப்பேசியை கொள்ளையடித்த 23 வயதான ஆடவனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஏழு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டது.
அந்த ஆடவன், தன் மீதான இரண்டு குற்றச்சாட்டுகளையும் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 17 அன்று கம்போங் மெஸ்ரா பலெக்பாங் (Kampung Mesra Palekbang) பகுதியிலுள்ள புதர்ப் பகுதியில் சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்ததுடன், மரக்கட்டையை காட்டி மிரட்டி அவரது கைப்பேசியையும் பறித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பாலியல் பலாத்கார குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை மற்றும் ஐந்து பிரம்படி தண்டனையும், கொள்ளை குற்றத்திற்காக ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டது.
இரண்டு தண்டனைகளும் தொடர்ச்சியாக அனுபவிக்க வேண்டும் என்பதால், மொத்தம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சிறைத் தண்டனை காலத்தில் ஆலோசனைச் சிகிச்சை பெறவும், விடுதலையான பின்னர் மூன்று ஆண்டுகள் காவல்துறை கண்காணிப்பில் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சிறுமி பின்னர் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முன்பு தெரிவிக்கப்பட்டது.



