
புதுடெல்லி, ஜூலை 21 – ஜப்பானின் டகேடா (Takeda) மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கு இந்தியா முதல் முறையாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவின் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO), 4 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த தடுப்பூசியின் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆய்வு செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்கப்பட்டதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த தடுப்பூசி இரண்டு தவணைகளாக, மூன்று மாத இடைவெளியில் செலுத்தப்படுகிறது. இது டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் எதிராக பாதுகாப்பு வழங்குகிறது.
இந்த தடுப்பூசி ஏற்கனவே 42 நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், உலக சுகாதார அமைப்பின் (WHO) முன்தகுதி அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதுவரை உலகளவில் 2 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான டோஸ்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், பெரிய பாதுகாப்பு பிரச்சினைகள் எதுவும் பதிவாகவில்லை.
2021ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான டெங்கு பாதிப்புகளும், 1,500-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், இந்தியாவின் Biotec நிறுவனம் உருவாக்கி வரும் DengiAll என்ற ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசி இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.



