
செர்டாங், ஜூலை-24-செர்டாங்கில் உள்ள சிலாங்கூர் மொத்த விற்பனைச் சந்தைக்கு அருகில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இரவு 11 மணியளவில், அங்கே கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2,000 எரிவாயு உருளைகள் (gas canisters) வெடித்ததால், தீ மளமளவென்று பரவி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீயணைப்பு – மீட்புப் படையைச் சேர்ந்த 68 வீரர்களும், 67 தன்னார்வத் தீயணைப்பு வீரர்களும், 19 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து போராடினர்.
அப்பகுதியில் இருந்த சில தீயணைப்பு நீர்க்குழாய்கள் (fire hydrants) பழுதடைந்திருந்ததால், தீயணைப்பு வீரர்கள் நீர் டாங்கிகளைப் பயன்படுத்தி மிகவும் சிரமப்பட்டு தீயைக் கட்டுப்படுத்தினர்.
தீ அருகில் உள்ள மற்ற கிடங்குகளுக்கும் பரவியபோதிலும், வெறும் 50 மீட்டர் தொலைவில் இருந்த பிரதான மொத்த விற்பனை சந்தைக்குத் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தடுத்தனர்.
அதிகாலை 1.20 மணியளவில் தீ முற்றிலுமாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



